மொழி பெயர்ப்புக் கருவி

Monday, September 19, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 43)பஞ்ச கல்பம்

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்
அன்புள்ள பதிவு வாசகர்களே,
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும்,பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது.மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.


கண் பிராணன் நின்று உலவும் இடம்,மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது.நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள்.ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது.உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை,தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன.கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம்,தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம்,வாதம்,சன்னி,பல கர்ம வியாதிகள்,தோல் வியாதிகள்,மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது.இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.


இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.


இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம்.பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர் இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன்,நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.


சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதால் ஞானத்திற்கும் உதவுகிறது.இப்படிப்பட்ட ஓர் அற்புத மருந்தை உங்களுக்கு தெரிவிப்பதற்கு ஆண்டவன் எனக்கு கிருபை செய்துள்ளான்.அனைவரும் பெற்று ஆனந்தித்து மகிழ்வீர்களாக.
 பஞ்ச கல்பம்(பதார்த்த குண விளக்கம்)
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும். 
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்


மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.


மேற்படி முறை பதார்த்த குண விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.வள்ளலார் கண்ட வேறு முறை பஞ்ச கல்பம் இதோ கீழே>>
வள்ளலார் பஞ்ச கல்பம்
1)கசகசா
2)பாதாம் பருப்பு
3)கொப்பரைத் தேங்காய்
4)மிளகு சுத்தி செய்தது
5)சீரகம் சுத்தி செய்தது


மேற்கண்ட பொருள்களை சம எடை எடுத்து கலந்து பொடி செய்து வைத்துக் கொண்டு பாலில் அரைத்து காய்ச்சி தேய்த்து குளிக்க வேண்டும். இப்படிச் செய்து வர கண்ணொளி பெருகி பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்பார்வைத்திறன் உண்டாகும். ஆயுள் நீளும். நல்ல ஞானம் உண்டாகும். சஹஸ்ராரச் சக்கரம் வலுவடையும். மேலும் நாம் ஞான வழியில் முயற்சி செய்ய ஞானப் பால் சுரக்கும். உடலெங்கும் அவ்வமுதம் கலக்க உடல் அழியாது.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

  1. தெரியாத மிக ரகசியமான விசயங்களை
    எந்த விதமான பிரதிபலனும் இல்லாமல் எங்களுக்காக
    தங்களின் மேலான நேரத்தை ஒதுக்கி
    ஆன்மீக தொண்டு
    செய்யும் எங்கள் சாமீ ஜி க்கு
    நன்றிகள் பல கோடி

    என்றும் அன்புடன்
    ஷரீப்

    ReplyDelete
  2. தட்டுங்கள் திறக்கப்படும்
    கேளுங்கள் கொடுக்கப்படும்

    சாமீ ஜி யின் தளத்திலே

    ReplyDelete
  3. அன்புள்ள பாவா ஷெரீஃப் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி,
    இறைவனின் பேனா நான். அவன் எழுதினால் எழுதுகிறேன். அவன் நிறுத்தினால் நான் நின்றுவிடுவேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. அய்யா
    தினமும் தலையில் தேய்த்து குளிக்க வேண்டுமா அல்லது வாரம் ஒரு முறையா???
    தலையில் தேய்த்த பின்னர் எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும் ???
    காலை அல்லது மாலை எந்த நேரம் வேண்டுமானாலும் தேய்த்து வைத்து குளிக்கலாமா???

    தையவு செய்து விளக்கம் கூறுங்கள் அய்யா,

    தங்களின் தன்னலமற்ற பணிக்கு , மனமார்ந்த நன்றி ,

    இளங்கோ .

    ReplyDelete
  5. சுத்தி செய்வது எப்படி

    ReplyDelete
  6. மிக்க நன்றி.மிக அருமையான பதிவு.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்